ருத்ர தாண்டவம் படத்தின் திரை விமர்சனம்

ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புடன் இன்று திரையங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பப் ஒன்றில் இளைஞர்கள் சிலர் பெண்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து அவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்கிறார்கள். யாரும் பார்த்திராத வகையில், அந்தக் குழுவினரை பிடிக்கிறார் ரிச்சர்டு ரிஷி.

Advertisement

காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதில் எதிர்பாராத விதமாக கொலை வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இதன் பின்னணியில் சாதி பிரச்சனை தலைதூக்குகிறது. இந்த பிரச்சனைகளை தாண்டி தான் ஒரு குற்றமற்றவர் என்பதை அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் ருத்ர தாண்டவம் படத்தின் கதை.

காவல் ஆய்வாளராக ரிச்சர்டு ரிஷி மொத்த படத்தையும் தூக்கி சுமக்கிறார். வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஸ்டைலில் நடிப்பில் மிரட்டுகிறார். கதாநாயகியாக வரும் தர்ஷா குப்தா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

போதைப் பொருள் கடத்தல், அதன் பின்னணியில் சாதி, மத பிரச்சனைகள், அரசியல் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் பாதிப்பை இப்படம் எடுத்து காட்டுகிறது.

போதைப் பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது, பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள், ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்துவதால் அவரது குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மோகன் ஜி.

படத்தில் காட்டப்படும் சில அரசியல்வாதிகள் நிஜ அரசியல் தலைவர்களை நினைவுபடுத்துகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டுவிட்டு மதம் மாறுகிறார்கள் என்ற வசனமும் இடம்பெறுகிறது.

பின்னணி இசை மூலம் படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா படத்தை பிரம்மாண்டமாக காட்ட முயற்சித்திருக்கிறார்.

மொத்தத்தில் வலதுசாரி சிந்தனை உடையவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ருத்ர தாண்டவம்.