‘ராக்கி’ திரை விமர்சனம்

வஸந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோஹினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இப்படத்தை தயாரித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார்.

வசந்த ரவியின் பெற்றோர் இலங்கை போரில் உயிர் பிழைத்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அதன்பிறகு ரவியின் தந்தை பாரதிராஜாவிடம் சேர்ந்து ரவுடி தனங்களை செய்கிறார். ரவியின் தந்தை இறந்த பிறகு அவர் செய்து வந்த வேலை அனைத்தும் வசந்த் ரவியிடம் வந்து சேருகிறது.

இதனிடையே பாரதிராஜா மகனுக்கும் வசந்த் ரவிக்கும் இடையே ஈகோ பிரச்சினை ஏற்படுகிறது. இதில் பாரதிராஜாவின் மகன் வசந்த் ரவியின் அம்மாவை கொலை செய்கிறார். பதிலுக்கு வசந்த் ரவி பாரதிராஜாவின் மகனை கொலை செய்கிறார். இதனால் வசந்த் ரவிக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே பகை உருவாகிறது.

Advertisement

இதனிடையே வசந்த் ரவியின் தங்கை ரவீனா ரவி காணாமல் போகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

டீசர் மற்றும் டிரைலரில் காட்டப்பட்ட ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் வன்முறைகளும் படம் முழுக்க இருக்கின்றன. சுத்தியலை எடுத்து கன்னத்தில் சொருகுவது, துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுப்பது போன்ற ரத்தக் களறியான காட்சிகள் இருக்கிறது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையில் இருந்து விலகாமல் படம் நேர்கோட்டில் செல்கிறது தேவையில்லாத காட்சிகள், கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை.

மணிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா நடிப்பில் மிரட்டி உள்ளார். படத்தில் நடித்த அனைவருமே தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நடந்த கதைக்கு ஒரு நிறம், நடக்கவிருப்பதற்கு ஒரு நிறம். வித்தியாசமான கோணங்கள் என ஒளிப்பதிவாளர் ஷ்ரீயாஸ் கிருஷ்ணாவுக்கு இதில் கூடுதல் பணி. அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பின்னணி இசையில் காட்சிகளின் அதிர்வுகளை நமக்குக் கடத்துகிறார் தர்புகா சிவா.

வழக்கமான ஒரு கதையைக் கையிலெடுத்து புதுமையாக சொல்லி ஜெயிக்கிறது ‘ராக்கி’.