பொன் மாணிக்கவேல் திரை விமர்சனம்

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அவரது பெயரையே தனது படத்திற்கு வைத்துள்ளார் பிரபுதேவா.

இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.சி.முகில் படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement
Pon Manickavel movie vimarsanam in tamil

படத்தின் முதல் காட்சியில் நீதிபதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிறகு அவரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதை விசாரிக்கும் காவல் துறை எந்த ஆதாரமும் இல்லாததால் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

பிறகு இந்த வழக்கை விசாரிக்க பொன் மாணிக்கவேலை (பிரபுதேவா) நியமனம் செய்கின்றனர். ஒருகட்டத்தில் அந்த கொலையை செய்தது பிரபுதேவாதான் என தெரியவருகிறது. அவர் ஏன் அந்த கொலையை செய்தார். அதற்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரபுதேவா அந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவு பொருந்துகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் வேகம் கொடுக்கவில்லை. பிரபுதேவாவின் மனைவியாக வரும் நிவேதா பெத்துராஜ் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

நிவேதா பெத்துராஜிற்கும் பிரபு தேவாவுக்கும் இடையேயான காதல் காட்சிகளும் சலிப்பைதான் ஏற்படுத்துகின்றன. நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகளிலும் சிரிக்க முடியவில்லை. படத்தில் பல லாஜிக் மீறல்கள் உள்ளன.

கொலையாளி யார் என கண்டுபிடிக்கும் காட்சிகள் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கும் டி.இமான் ஒரே இசையை மீண்டும் மீண்டும் வாசித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் பொன்மாணிக்க வேல் : வேகம் குறைவு