ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர், அஷ்வின் குமார், வேணு அரவிந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Oh Manapenne movie thirai vimarsanam

இது தெலுங்கு திரைப்படமான பெல்லி சூப்புலுவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

Advertisement

இஞ்சினியரிங் முடித்த ஹரிஷ் கல்யாண் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கரைப் பெண் பார்க்கச் செல்கிறார்கள். அப்போது இருவரும் தங்களுடைய முந்தைய காதலைப் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள்.

தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும் தான் ஆஸ்திரேலியா போக விரும்புவதாக பிரியா பவானி சங்கர் கூறிவிடுகிறார். வரதட்சணை கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் நானும் பெண் பார்க்க வந்ததாக ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.

பிறகு ஹரிஷ் கல்யாணின் தந்தை நாம் தவறான முகவரிக்கு வந்து விட்டோம் என கூற அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர். அதன்பின் ஹரிஷுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்கிறார்கள். தன்னுடைய தொழிலை கவனித்துக்கொள்ள கூடிய ஒரு தகுதி இருந்தால் தான் இந்த திருமணம் நடக்கும் என்று ஹரிஷின் வருங்கால மாமனார் கூறுகிறார்.

இதனிடையே, பிரியா, ஹரிஷுடன் இணைந்து நடமாடும் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கிறார். அதன் பிறகு ஹரிஷ் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை.

காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர். பொறுப்பில்லாத இளைஞராக ஹரிஷ் கல்யாண் இயல்பாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கரும் இயல்பாக நடித்துள்ளார்.

ஹரிஷ் அப்பாவாக வேணு அரவிந்த், நண்பர்களாக அன்புதாசன், அபிஷேக் குமார் , பிரியா அப்பாவாக கேஎஸ்ஜி வெங்கடேஷ் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தை அழகாக கொண்டு செல்கிறது. படத்தில் சண்டை காட்சிகள் கிடையாது. படத்தில் சில காட்சிகளின் நீளம் அதிகம் உள்ளது. அதனை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருப்தியான காதல் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி.