‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரை விமர்சனம்

கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம்.

இந்த படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், சுஹாசினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Advertisement
Marakkar movie vimarsanam in tamil

முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர் சிறுவயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறார். குடும்ப உறவினர்களின் துரோகத்தால் ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பமும் போர்ச்சுகீசிய படைகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறது.

தனது தாய் தன் கண்ணெதிரே போர்ச்சுகீசியர்களின் கையால் உயிர் விடுவதை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல், தனது சித்தப்பாவுடன் தப்பிக்கிறார் இளைஞன் குஞ்சாலி. பிறகு சாமுத்ரிகா அரசு ஆட்சி செய்யும் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைகிறார் குஞ்சாலி.

போர்ச்சுகீசியர்கள் மீது கொண்ட வெறுப்பால், கடலில் வரும் அவர்களது கப்பல்களை கொள்ளையடித்து, அவற்றை நிர்மூலமாக்குகிறார். போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தை விரும்பாத ராஜா குஞ்சாலி மரைக்காயாரை கப்பற்படை தலைவர் ஆக்குகிறார்.

இதனிடையே மரைக்காயருக்கும் சாமுத்ரி அரசவைக்கும் இடையில் கீர்த்தி சுரேஷின் காதலால் விரிசல் ஏற்படுகிறது. இதன் பின்னர் என்னவானது என்பதே ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியில் புதிது புதிதாக கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். அவரது இளமைப்பருவ கதாபாத்திரமாக அவரது மகன் பிரணவ் மோகன்லாலே நடித்திருப்பது சிறப்பு.

படத்தில் நிறைய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், பலருக்கும் ஒன்றிரண்டு காட்சிகளே கிடைத்திருக்கின்றன. அதனால், எந்தப் பாத்திரத்தையும் ரசிக்கவோ, ஒன்றிப்போகவோ முடியவில்லை. படத்தில் வருபவர்கள் அணிந்திருக்கும் உடைகளும் மத்திய கிழக்கு நாடுகளை நினைவுபடுத்துகின்றன.

ராகுல்ராஜின் பின்னணி இசையுடன் அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல் ஆகியோரின் கூட்டு முயற்சியில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

வரலாற்றுப் படங்களை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர் திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருக்கலாம்.