விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயற்கை, ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல போராட்டம் மற்றும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளிவந்துள்ளது.

பக்கிரி (விஜய் சேதுபதி) 7 வருடத்திற்கு முன் அவருடைய ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறார். வெளியேறிய அவர் பல நாடுகள் சுற்றி, திரிந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்புகிறார்.

Advertisement

தனது ஊரை விவசாயத்தின் மூலம் செழிப்பாக்க வேண்டும் என தனது நண்பர்களுடன் சேர்ந்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய முயற்சி எடுக்கிறார். அதற்காக மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க போராடுகிறார்.

laabam thirai vimarsanam

இன்னொரு புறம் ஜெகபதி பாபு மக்களுக்கு நல்லது செய்வது போல நடித்து மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்கிறார்.

விஜய் சேதுபதி மக்களிடம் இருந்து நம்பிக்கையை பெற நாடக கலைஞர்களை வரவைக்கிறார். அதில், நாடக கலைஞராக கிளாரா (ஸ்ருதிஹாசன்) என்ட்ரி கொடுக்கிறார்.

ஒரு வழியாக மக்களின் நம்பிக்கையை பெரும் விஜய் சேதுபதி கடுமையான உழைப்பினால் தரிசு நிலங்களில் விவசாயம் செய்து விவசாய நிலமாக மாற்றுகிறார். அதுவரை அமைதியாக இருந்த ஜெகபதி பாபு ஒரே அடியில் விஜய் சேதுபதியின் மக்கள் செல்வாக்கை சரித்து விடுகிறார்.

அதிலிருந்து விஜய் சேதுபதி எப்படி மீண்டு வந்தார்? மீண்டும் மக்களிடம் நம்பிக்கையை சம்பாதித்தாரா? இல்லையா? விவசாயம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பக்கிரி கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி வழக்கம் போல தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். மக்களிடம் இருந்து உழைப்பை சுரண்டி எடுக்கும் வில்லனாக ஜெகபதி பாபு நடித்துள்ளார்.
கதாநாயகியாக வரும் ஸ்ருதிஹாசனிடம் எந்த நடிப்பும் இல்லை.

கலையரசன், ரமேஷ் திலக், ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியோர் விஜய் சேதுபதியின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

படத்தில் கருத்துக்கள் சிறப்பாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை கொஞ்சம் அலுப்பு தருகிறது. டி. இமானின் பின்னணி இசை சுமார் தான். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘லாபம்’ அதிக லாபம் இல்லை.