விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைவிமர்சனம்

அரசியல் சூழ்ச்சி காரணமாக விஜய் ஆண்டனியின் அம்மாவை எரித்து கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அதிலிருந்து தப்பித்த அவர் தனது மகனை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

படிப்பிற்காக சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி படித்துக்கொண்டே அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறார். இதில் விஜய் ஆண்டனிக்கும் ரவுடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத முடியாமல் போகிறது.

Advertisement

சென்னையில் நடக்கும் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெறுகிறார். அவர் குடியிருக்கும் பகுதியில் நல்லது செய்ய முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுக்கின்றனர்.

பிறகு விஜய் ஆண்டனியின் அம்மாவை வைத்து மிரட்டி கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கின்றனர். அதன் பிறகு ரவுடிகளுக்கும் அரசியவாதிகளுக்கும் எதிராக விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்ன என்பதை இந்த படத்தில் சொல்ல வருகிறார்கள்.

விஜய் ஆண்டனி ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகியாக வரும் ஆத்மிகாவுக்கு சொல்லும்படியான காட்சிகள் எதுவும் இல்லை. இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.

கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.