சித்திரைச் செவ்வானம் திரை விமர்சனம்

மாஸ்டர் சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரைச் செவ்வானம் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அரசம்பாளையம் கிராமத்தில் சமுத்திரக்கனி தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால் தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். சமுத்திகனியின் மகள் பூஜா கண்ணன் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் பூஜா கண்ணனின் தவறான வீடியோ ஒன்று வைரலாக பரவுகிறது. பிறகு பூஜா கண்ணன் காணாமல் போகிறார். ஒரு பக்கம் காவல் துறையும் இன்னொரு பக்கம் சமுத்திரக்கனியும் காணாமல் போன பூஜா கண்ணனை தேடி வருகிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோன்ற சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட கதை தான் சித்திரைச் செவ்வானம்.

படத்தின் திரைக்கதை வேறு எங்கும் செல்லாமல் கதையை நோக்கி பயணிக்கிறது. சமுத்திரக்கனி பொறுப்பான தந்தையாக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதை இயல்பான நடிப்பின் மூலம் நிறைவு செய்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனியின் மகளாக நடித்துள்ளார். சமுத்திரக்கனியின் மனைவி வித்யா பிரதீப் சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். காவல் அதிகாரியாக வரும் ரீமா கல்லிங்கல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பொள்ளாச்சி அழகை கண்முன் கொண்டவந்து நிறுத்தியுள்ளனர். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு பொருந்துகிறது.